மதுரைக்கு சித்திரை திருவிழா போல் சென்னையின் பெருமைமிகு திருவிழாவாக ஆண்டு தோறும் புத்தக ஆர்வலர்களின், வாசகர்களின், எழுத்தாளர்களின் மனங்கவர்ந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 2021-ஆம் ஆண்டில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறியதுமே, தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு செயல் பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். தமிழறிஞர்களுக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள், இலவச வீடுகள் என்று வழங்கி பெருமைப்படுத்திவருகிறது தமிழக அரசு.
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங் களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து செம்மையாக நடத்திவருகிறது. அதேபோல், அந்தந்த பகுதிகளின் பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா, கரிசல் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா என்று பல்வேறு இலக்கியத் திருவிழாக் களை நடத்திவருகிறது. இப்படியான முன்னெடுப்பு களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, சென்னை புத்தகத் திருவிழா மிகப்பிரமாண்டமான கொண்டாட்டமாக நடைபெறும்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பாக, 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 2024, டிசம்பர் 27 முதல் 2025, ஜனவரி 12 வரை நடைபெறுகிறது. வழக்கமாக புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து பொங்கல் பண்டிகையை உள்ளடக்கி நடைபெறும். கொரோனா பொதுமுடக்க காலத்துக்குப்பின் எந்த பண்டிகை விடுமுறை வந்தாலும் சென்னையிலிருப்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. எனவே கடந்த சில ஆண்டு களாக பொங்கல் விடுமுறை நாட்களில் புத்தகக் கண்காட்சியின் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. மேலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தும்விதமாகவும், சென்னை புத்தகக் கண்காட்சி, பொங்கல் விடுமுறைக்கு முன்னதாக நிறைவுபெறும் வகையில், இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சி, டிசம்பர் மாத இறுதியிலேயே தொடங்கியுள்ளது.
48-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, டிசம்பர் 27ஆம் தேதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் முருகன், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர்கள் நக்கீரன் ஆசிரியர், புருஷோத்தமன், இணைச் செயலாளர் துரை மாணிக்கம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், புத்தகக் கண்காட்சி அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் அரங்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அரங்கு, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தொல்லியல் துறை, இல்லம் தேடிக் கல்வி அரங்கு களோடு, நக்கீரன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், சாகித்ய அகாதெமி, தமிழ் இந்து, காலச்சுவடு, சூரியன் பதிப்பகம், பெரியார் சுயமரியாதை புத்தக நிறுவனம், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்த தாக, 2025, ஜனவரி 16, 17, 18-ஆம் தேதிகளில் நந்தனம் வர்த்தக மையத்தில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. அவற்றின் மூலம், பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள் விற்பனைக்காக வைக்கப்படும். இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில், தமிழ் மொழியில் வெளியான நூல்களை பல வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யவும், வெளிநாட்டு நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதற்கு ஏதுவாக அமையும்.
இது, தமிழ் மொழியில் வெளியான இலக்கியங் களை உலக அளவுக்கு கொண்டு செல்வதற்கும், உலகிலுள்ள முக்கியமான இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவந்து, நம் மொழியை வளப் படுத்தவும் உதவும்.
நமது நக்கீரன் பதிப்பகத்தின் அரங்கம், புத்தக ஆர்வலர்களின் வேடந்தாங்கலென அனைவரையும் ஈர்த்துவருகிறது. இந்த ஆண்டுக்கான புதிய வரவுகளாக, நக்கீரனில் தொடராக வெளியாகிப் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்ட நக்கீரன் ஆசிரியரின் போர்க்களம் தொடரின் முதல் பாகத்திலிருந்து எட்டாம் பாகங்கள் வரையிலான முழுத் தொகுப்பும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழறி ஞர் கலைஞரின் வரலாற்றை பேசக்கூடிய நெஞ்சுக்கு நீதி நூலின் 6 பாகங்களை 3 புத்தகங்களாக, ஏ4 வடிவில், அட்டைக் கட்டு நூலாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
கலைஞரின் குறளோவியம், ரோமாபுரிப் பாண்டியன் ஆகிய நூல்களும் மலிவு விலைப் பதிப்பாக, மிகச்சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஆரிய மாயை, நீதிதேவன் மயக்கம், ரோம் எரிகிறது, ரோமாபுரி ராணிகள் ஆகிய 5 நூல்களையும் புதிய வடிவில் ஒரே புத்தகமாகத் தொகுத்து நக்கீரன் வெளியிட்டுள்ளது. மேலும் நக்கீரனில் வெளியான திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகானின் 'கருப்பு + சிவப்பு = புரட்சி!' நூலும், சித்தர்கள் பற்றிய தொகுப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன. மாணவர்கள் போட்டித் தேர்வு களுக்கு தயாராவதற்கு பெரிதும் உதவும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள "இயர்புக் 2025' சிறப்பான முறையில் தயாராகி யுள்ளது. இனிய உதயத்தில் இடம்பெறும் மொழிபெயர்ப் பாளர் சுராவின் மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பும் இவ்வாண்டு நக்கீரன் ஸ்டாலில் இடம்பெறுவது இனிய உதயம் வாசகர்களுக்கு விருந்தாக அமையும்.
புத்தகக் கண்காட்சியின் தொடக்கம் முதலே வாசகர் களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஒருபுறம் ஆன்லைன் மூலமாக புத்தக விற்பனை பெரிய அளவில் நடைபெறும் சூழலிலும், நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்கு குடும்பமாக வந்து, புத்தகங்களைப் பார்வையிட்டும், புரட்டிப் பார்த்தும் பைகள் நிறைய புத்தகங்களை வாங்கிச்செல்லும் தாகம் புத்தக ஆர்வலர்களிடம் தீராதிருப்பது, புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பிக்கும் பதிப்பாளர் களுக்கும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது!